அட கொடுமையே... ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக ஆண் குழந்தையை விற்ற பெற்றோர் - 7 பேர் கைது!
மகாராஷ்டிராவில் ஆடம்பர ஆசைக்காகத் தங்களின் பச்சிளம் ஆண் குழந்தையை ரூ.1.20 லட்சத்திற்கு விற்ற பெற்றோர் உட்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குழந்தையை மீட்டுப் பாதுகாப்பாகக் காப்பகத்தில் சேர்த்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் முகுந்த்வாடி பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தம்பதி, குடும்ப வறுமையின் காரணமாக அல்லாமல், தங்களது ஆடம்பர ஆசைக்காகப் பிறந்த ஆண் குழந்தையை விற்றுள்ளனர்.
குழந்தையை விற்றுக்கிடைத்த ரூ.1.20 லட்சம் பணத்தில், அந்தப் பெற்றோர் ரூ.25,000 மதிப்பில் ஒரு ஸ்மார்ட்போனையும், ரூ.62,000 மதிப்பில் தங்கச் சங்கிலியையும் வாங்கியுள்ளனர். ரகசியத் தகவலின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் அந்தப் பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
முதலில் சீமா ரேஷ்வால் என்பவரிடம் ரூ.1.20 லட்சத்திற்கு விற்கப்பட்ட குழந்தை, அடுத்தடுத்த புரோக்கர்கள் மூலம் கைமாறி ஐதராபாத்தைச் சேர்ந்த உமா கத்காம் என்பவரிடம் ரூ.3.50 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் ஐதராபாத் பெண்ணிடமிருந்து குழந்தையைப் பத்திரமாக மீட்டு, குழந்தை நலக் குழுவிடம் ஒப்படைத்துள்ளனர். குழந்தை தற்போது காப்பகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் நிலையில், குழந்தையின் பெற்றோர் மற்றும் இடைத்தரகர்கள் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.