அட கொடுமையே... ரூ.2,250 பணத்துக்காக நண்பனையே மின்சாரம் பாய்ச்சி கொலை செய்த கொடூரம்!

 

பணம்... பணம்.. பணம்.. பணம் தான் உலகம் என்று வாழ்க்கையைத் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். தாய் மகனைக் கொல்வது, மகன் தந்தையைக் கொல்வது என்று பணம், சொத்துக்காக மனிதத்தை மறந்து மிருகங்களாக மாறிக் கொண்டிருக்கிறோம்.

வெறும் ரூ.2,250 பணத்துக்காக உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் தனது நண்பனையே மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ததாக வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லக்னோவை சேர்ந்த பிர்ஜூ மற்றும் சச்சின் நண்பர்கள். இருவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் 28-ம் தேதி சச்சினுக்கு பணம் தேவைப்பட்ட நிலையில், பிர்ஜூவிடம் கேட்டுள்ளார். தன்னிடம் பணம் இல்லை என்று பிர்ஜூ கூறியதை தொடர்ந்து, சச்சின் தனது பைக்கை அடகு வைத்து பணம் பெற்றுள்ளார்.

பின்னர் இருவரும் மதுபானம் வாங்கி பிர்ஜூவின் அறையில் வைத்து மது அருந்தியுள்ளனர். அதிக அளவில் மது அருந்திய சச்சின், போதையில் சுயநினைவை இழந்ததாக கூறப்படுகிறது.அப்போது சச்சினின் சட்டைப் பையில் ரூ.2,250 இருப்பதை பிர்ஜூ பார்த்ததாகவும், அந்த பணத்தை திருடும் நோக்கில் சச்சினுக்கு மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ததாகவும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து சச்சினின் உடலை மற்றொரு நபரின் வீட்டின் முன்பு வீசிவிட்டு பிர்ஜூ அங்கிருந்து சென்றதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, சச்சினை கொலை செய்து உடலை அப்புறப்படுத்திய சம்பவம் தொடர்பான தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து பிர்ஜூவை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து மின்சார வயர் மற்றும் சச்சினிடம் இருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படும் ரூ.2,250 பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.