“விடியா அரசே... மக்களை அலைக்கழிக்காதே..’ மதுரையில் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்!

 

மதுரை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள ஊழல் முறைகேடுகள் மற்றும் நிர்வாகச் சீர்கேடுகளைக் கண்டித்து, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) சார்பில் வரும் மார்ச் 12-ம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. 

மதுரை மாநகராட்சி நிர்வாகத்தில் நிலவும் ஊழல்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ராஜினாமா செய்தும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படாததைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.

மதுரை மாநகராட்சி மேயர், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் நிலைக் குழுத் தலைவர்கள் மீதான ஊழல் முறைகேடு புகார்கள் தொடர்பாக திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அதிமுக குற்றம் சாட்டியுள்ளது. சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் ராஜினாமா செய்து 5 மாதங்கள் ஆகியும், அந்தப் பதவிகளுக்குப் புதியவர்களைத் தேர்ந்தெடுக்காமல் மாநகராட்சி நிர்வாகத்தை முடக்கி வைத்துள்ளதாக இ.பி.எஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் மதுரை மக்களின் குடிநீர், சாலை வசதி போன்ற அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மார்ச் 12ம் தேதி காலை 10:00 மணிக்கு முனிச் சாலை, தினமணி தியேட்டர் அருகில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.