அட கடவுளே... டவுன் பஸ் போல... ரயிலை நிறுத்திவிட்டு சமோசா வாங்கச் சென்ற லோகோ பைலட் - வைரலாகும் வீடியோ!
டவுன் பஸ் போல நினைச்ச இடத்துல சாவகாசமாக ரயிலை நிறுத்திவிட்டு, இறங்கிச் சென்று சமோசா வாங்கிக் கொண்டிருந்த லோகோ பைலட் வீடியோ வைரலாகி வருகிறது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில், லோகோ பைலட் ஒருவர் சமோசா வாங்குவதற்காக மின்சார ரயிலை நடுவழியில் ரயில்வே கேட் அருகே நிறுத்திவிட்டு சென்று கடையில் சமோசா வாங்கிவிட்டு, பின்னர் ரயிலை இயக்கிச் சென்ற ஆபத்தான விதிமீறல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு குறிப்பிட்ட ரயில்வே கேட் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ரயில் வந்து கொண்டிருப்பதை அறிந்து அங்கிருந்த கேட் கீப்பர் தண்டவாளத்தின் குறுக்கே இருந்த இரும்பு கேட்டுகளை மூடிப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளார்.
அப்போது அங்கு வந்த மின்சார ரயில், வழக்கத்திற்கு மாறாகத் தண்டவாளத்தின் நடுவிலேயே திடீரென நிறுத்தப்பட்டது. ரயிலில் இருந்து லோகோ பைலட் இறங்க, அங்கு தயாராக இருந்த ஒரு நபர் காகிதப் பையில் சுடச்சுடச் சமோசாக்களை அவரிடம் கொடுத்துள்ளார். சமோசாவை வாங்கிக் கொண்டு லோகோ பைலட் மீண்டும் ரயிலை எடுத்துச் சென்றுள்ளார். இதனை அங்கிருந்த பொதுமக்கள் சிலர் தங்களது செல்போன்களில் வீடியோ எடுத்துச் சமூக வலைத்தளங்களில் பதிவிட, அது காட்டுத்தீயாய் பரவி வைரலானது.
இந்த வீடியோவைப் பார்த்த பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் லோகோ பைலட்டின் இந்த அலட்சியமானப் போக்கிற்குத் தங்களது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். நூற்றுக்கணக்கான பயணிகளின் உயிரைச் சுமந்து செல்லும் ஒரு ரயிலை, தங்களது சுயநலப் பசிக்காக நடுவழியில் நிறுத்துவது எவ்வளவு பெரிய விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த வினோத மற்றும் அடுக்காத விதிமீறல் சம்பவம் இந்திய ரயில்வே நிர்வாகத்தின் கவனத்திற்குச் சென்றதை அடுத்து, சம்பந்தப்பட்ட லோகோ பைலட் மற்றும் அதற்குத் துணையாக இருந்த கேட் கீப்பர் ஆகியோர் மீது துறை ரீதியான உரிய விசாரணை நடத்தி, கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.