எகிப்தில் எண்ணெய் டேங்கர் லாரி வெடித்து விபத்து... 31 பேர் பலி; 27 வாகனங்கள் தீக்கிரை!
எகிப்து தலைநகர் கெய்ரோவில் எரிபொருள் ஏற்றிச் சென்ற எண்ணெய் டேங்கர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து வெடித்த கோர விபத்தில் 31 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதோடு, சாலையில் சென்று கொண்டிருந்த சுமார் 27 வாகனங்கள் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகின.
கெய்ரோ நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த எண்ணெய் டேங்கர் லாரி, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் பயங்கரமாக மோதி கவிழ்ந்தது.
லாரி கவிழ்ந்த வேகத்தில் அதிலிருந்து எரிபொருள் பெருமளவில் சாலையில் கசிந்து தீப்பிடித்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த டேங்கர் லாரி பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.
எண்ணெய் டேங்கர் லாரி வெடித்ததில் எழுந்த தீப்பிழம்புகள், சாலையில் அருகே சென்று கொண்டிருந்த மற்றும் நின்று கொண்டிருந்த பிற வாகனங்களுக்கும் வேகமாகப் பரவியது. இதில் சுமார் 27 வாகனங்கள் முற்றிலும் தீக்கிரையாகி எலும்புக்கூடாக மாறின.
இந்த கோர விபத்தில் 31 பேர் உயிரிழந்த நிலையில், பலத்த தீக்காயங்களுடன் 20-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.