உறைய வைக்கும் வீடியோ...  எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை குழாயில் பயங்கர தீ விபத்து... 15 பேர் படுகாயம்!

 

மேற்கு வங்க மாநிலம் பூர்வ மேதினிபூர் மாவட்டத்தில் ஹால்டியா பெட்ரோகெமிக்கல்ஸ் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை அமைந்திருக்கிறது. இங்குள்ள நாப்தா எரிபொருள் கொண்டு செல்லும் குழாயில் இன்று அதிகாலை 2.45 மணி அளவில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்தத் தீ மிக வேகமாகப் பரவி அருகில் உள்ள சிராஞ்சிவ்பூர் குடியிருப்புப் பகுதியில் இருந்த சில வீடுகளையும் முழுமையாகச் சூழ்ந்து கொண்டது. இதனால் அங்கு வசித்து வந்த மக்கள் அலறியடித்தபடி பாதுகாப்பான இடங்களை நோக்கி ஓடினர்.

allowfullscreen

இந்த விபத்தின் காரணமாக அந்தப் பகுதியில் பணியில் இருந்த தொழிலாளர்கள் மற்றும் குடியிருப்புகளில் வசித்து வந்த பொதுமக்கள் உட்பட 15 பேர் உடல் கருகிப் பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் அனைவரும் உடனடியாக மீட்கப்பட்டு ஹால்டியா துணைப் பிரிவு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிலரது நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் அவர்கள் மேல் சிகிச்சைக்காகத் தம்லுக் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 12 தீயணைப்பு வாகனங்கள் நீண்ட நேரம் போராடித் தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தன. இந்தத் தீ விபத்தின் காரணமாக அருகில் இருந்த ரயில்வே மின்சாரக் கம்பிகளும் சேதமடைந்ததால் ஹால்டியா மற்றும் ஹவுரா இடையேயான ரயில் சேவைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டன. குழாயில் ஏற்பட்ட கசிவு அல்லது அனுமதியின்றி எரிபொருள் திருட முயன்றபோது இந்த விபத்து நடந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நிலையில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த பகுதியை மாவட்ட உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்