திண்டிவனம் அருகே தடுப்புகளை உடைத்துக் கொண்டு மறுபுறம் பாய்ந்த ஆம்னி பேருந்து... தலைக்குப்புற விழுந்து விபத்து... ஒருவர் பலி; 20 பேர் படுகாயம்!
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இன்று மாலை நிகழ்ந்த பயங்கர விபத்தில் ஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களை நோக்கிச் சென்ற தனியார் ஆம்னி பேருந்து, திண்டிவனம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. நிலைதடுமாறிய பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு, சாலையின் மறுபுறத்திற்குப் பாய்ந்தது.
அதிவேகமாக வந்த பேருந்து மறுபுறம் சென்ற வேகத்தில் தலைகீழாகக் கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளானது. இதனால் அந்தப் பகுதியே போர்க்களம் போலக் காட்சியளித்தது. விபத்து நடந்தவுடன் அருகில் இருந்தவர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்தப் பேருந்து விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ஒருவர் உடல் நசுங்கி உயிரிழந்தார். பலியானவர் குறித்த விவரங்களைச் சேகரிக்கக் காவல்துறையினர் முயற்சித்து வருகின்றனர். பேருந்தில் பயணம் செய்தவர்களில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிகிறது. காயமடைந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனை மற்றும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்துக் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த திண்டிவனம் காவல்துறையினர், கிரேன் உதவியுடன் கவிழ்ந்த பேருந்தை அப்புறப்படுத்தினர். விபத்து காரணமாக ஜிஎஸ்டி சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. ஓட்டுநர் தூங்கியது விபத்திற்குக் காரணமா அல்லது பேருந்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதா என்பது குறித்துப் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.