பயங்கர விபத்து... சிமெண்ட் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி 20 பேர் படுகாயம்... !
கோவையில் இருந்து நாகர்கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து, இன்று காலை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே எதிர்பாராத விதமாக விபத்துக்குள்ளானது. நிலைதடுமாறிய அந்தப் பேருந்து, முன்னால் சென்று கொண்டிருந்த சிமெண்ட் கலவை லாரி மீது பலமாக மோதியது. இந்த விபத்தின் கோரமான சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் வாகன ஓட்டிகள் உடனடியாக மீட்புப் பணிகளில் இறங்கினர்.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பலர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு, போக்குவரத்துச் சீர் செய்யப்பட்டது. காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் ஓட்டுநரின் தூக்கக் கலக்கம் காரணமா அல்லது வாகனத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமா என்ற கோணத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தத் துயரச் சம்பவம் கோவில்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.