திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் - மேல்முறையீட்டு மனுக்கள் மீது ஆக.3-ல் உச்சநீதிமன்றத்தில் விசாரணை!
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுகளுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுக்கள் மீது வரும் ஆகஸ்ட் 3-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறவுள்ளது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதி அளித்துச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்னதாக உத்தரவிட்டிருந்தார். இந்தத் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு, தர்கா நிர்வாகம் மற்றும் சிலர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, தீபம் ஏற்றுவது தொடர்பாகப் பல்வேறு நிபந்தனைகளை விதித்துத் தீர்ப்பளித்தது. உயர்நீதிமன்ற இருநீதிபதிகள் அமர்வின் இந்த நிபந்தனைகளுக்கு எதிராகப் பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.
வழக்கறிஞர் ஜி.பாலாஜி மூலமாகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், "உயர்நீதிமன்றத்தின் உத்தரவு பக்தர்களின் நலன்களுக்கு எதிராகவும், ஏற்கனவே உறுதி செய்யப்பட்ட கோவில் உரிமைகளில் தலையிடும் வகையிலும் உள்ளது. எனவே, உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும்" எனக் கோரப்பட்டுள்ளது.
அரசு வழக்கறிஞர் பி.கருணாகரன் தாக்கல் செய்துள்ள மனுவில், உயர்நீதிமன்றத் தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும், வழக்கமாக முன்பு பின்பற்றப்பட்ட நடைமுறையின்படியே கார்த்திகை தீபத் திருவிழாவை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இந்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் அர்விந்த் குமார் மற்றும் வி.எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளன.