சுதந்திர தினத்தன்று சினிமா பாடலுக்கு நடனம் - வனத்துறை அதிகாரிகள் செயலுக்கு விமர்சனம்!
ஆந்திர மாநிலத்தில் சுதந்திர தின விழாவின் போது, தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டிருந்த அரசு அலுவலக வளாகத்திலேயே வனத்துறை அதிகாரிகள் சினிமா பாடலுக்கு நடனமாடிய சம்பவம் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநில வனத்துறை அலுவலகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. அங்குத் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, வனத்துறை அதிகாரிகள் சிலர் சினிமா பாடல்களுக்கு உற்சாகமாக நடனமாடியுள்ளனர்.
தேசியக் கொடி ஏறியிருந்த நிலையிலேயே, அரசு அலுவலக வளாகத்தில் அதிகாரிகள் இவ்வாறு கட்டுப்பாடின்றி நடனமாடியது அங்கிருந்தவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
இச்சம்பவத்தை அங்கிருந்த சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், சுதந்திர தினத்தின் புனிதத்தையும் அரசு அலுவலகத்தின் கண்ணியத்தையும் உணராமல் நடந்துகொண்ட வனத்துறை அதிகாரிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.