கேரளாவில் ஓணம் பண்டிகை கோலாகலமாகத் தொடங்கியது - பிரம்மாண்டமான அத்தப்பூ கோலம்!

 

கேரள மக்களின் முதன்மைப் பாரம்பரிய விழாவான ஓணம் பண்டிகைக் கொண்டாட்டங்கள் அத்தம் நட்சத்திர நன்னாளை முன்னிட்டுத் தொடங்கின. இதனால் கேரளா மாநிலம் முழுவதும் தற்போதே விழாக்கோலம் பூண்டுள்ளது.

ஓணம் பண்டிகையின் முதல் நாளை முன்னிட்டுத் திருச்சூர் வடக்குநாதன் கோவிலின் தெற்கு வாயில் பகுதியில் வண்ணமயமான மலர்களைக் கொண்டு பிரம்மாண்டமான அத்தப்பூக் கோலம் அமைக்கப்பட்டுள்ளது.

பல வண்ண மலர்களால் வட்ட வடிவில் கலைநயத்துடன் அமைக்கப்பட்ட இந்த அத்தப்பூக் கோலத்தின் வான்வழி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. பிரம்மாண்ட பூக்கோலத்தைக் காண்பதற்காகக் கோவிலில் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் சுற்றுலாப் பயணிகளும் குவிந்த வண்ணம் உள்ளனர்.

கேரளப் பாரம்பரிய ஆடைகளை அணிந்து வந்த இளைஞர்களும் பெண்களும் அத்தப்பூக் கோலத்தின் முன் நின்று புகைப்படங்கள் மற்றும் செல்பிக்களை எடுத்துத் தங்களது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். இன்று தொடங்கியுள்ள இந்த ஓணம் பண்டிகைக் கொண்டாட்டங்கள் அடுத்த 10 நாட்களுக்கு கேரளா முழுவதும் தொடர்ந்து நடைபெறவுள்ளது.