இன்று சபரிமலையில் அனைத்து பக்தர்களுக்கும் 'ஓண சத்யா' விருந்து... களைக்கட்டும் ஓணம் கொண்டாட்டம்!
இன்று ஓணம் பண்டிகையைக் முன்னிட்டுச் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து பக்தர்களுக்கும் தேவஸ்தானம் சார்பில் ஓணம் சத்யா விருது வழங்கப்படுகிறது.
முன்னதாக ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரிலையில் கடந்த திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு கோயில் தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து தீபம் ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து பதினெட்டாம் படிக்குக் கீழே உள்ள ஆழியில் தீ மூட்டப்பட்டது.
உத்திராட நாளான நேற்று செவ்வாய்க்கிழமை காலை 5 மணி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து உத்திராடம், திருவோணம், அவிட்டம் மற்றும் சதயம் ஆகிய நாட்களில் கோயிலில் சிறப்புப் பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெறுகின்றன.
ஓணம் திருநாளான இன்று 26-ம் தேதி சபரிமலைக்குத் தரிசனத்திற்கு வரும் அனைத்துப் பக்தர்களுக்கும் திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் பிரம்மாண்டமான முறையில் 'ஓண சத்யா' (ஓண விருந்து) வழங்கப்படுகிறது. ஓணம் திருவிழா சிறப்புப் பூஜைகள் அனைத்தும் நிறைவடைந்த பிறகு, வருகிற ஆகஸ்ட் 28-ம் தேதி இரவு 10 மணிக்குக் கோயில் நடை அடைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.