செங்கல்பட்டு அருகே லாரி மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து - ஒருவர் பலி; 18 பேர் படுகாயம்!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை நேரிட்ட கடுமையான சாலை விபத்தில், ஆம்னி பேருந்து கவிழ்ந்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 18-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்துள்ளனர்.
கரூரிலிருந்து சென்னை நோக்கி 36 பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த அரசூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, தனக்கு முன்னால் சென்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் அதிவேகமாக மோதியது.
மோதிய வேகத்தில் நிலைதடுமாறிய ஆம்னி பேருந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி தலைக்குப்புறக் கவிழ்ந்தது. விபத்து நடந்த சத்தம் கேட்டு அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் மற்றும் நெடுஞ்சாலை ரோந்துப் போலீஸார் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த கொடூர விபத்தில் பேருந்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, கரூர் பகுதியைச் சேர்ந்த செல்லமுத்து என்பவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
மேலும், பேருந்தில் பயணம் செய்த பயணிகளில் 18-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மதுராந்தகம் மற்றும் செய்யூர் பகுதி போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காகச் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து காரணமாகத் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசூர் பகுதியில் அதிகாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்திய பின் போக்குவரத்துச் சீரமைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து மதுராந்தகம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.