தமிழகத்தில் மேலும் ஒரு கைதி தப்பியோட்டம்... திணறும் போலீசார்; தண்டனை அறிவிக்கப்பட்ட அடுத்த நொடியே தப்பியோட்டம்!

 

மதுரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே, காவல்துறையினரின் பிடியிலிருந்து கஞ்சா வழக்குக் குற்றவாளி தப்பியோடிய சம்பவம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை அருகே உள்ள செம்மலை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவர் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை மதுரை மாவட்ட போதை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்காக நேற்று மாலை கைதி ராஜாவைச் சிறைக் காவலர்கள் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி, நான்கு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்த ராஜா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவரைக் குற்றவாளி என அறிவித்துத் தண்டனை விவரங்களை வாசித்தார்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே, காவல்துறையினரின் கவனத்தைத் திசைதிருப்பிப் பாதுகாப்பு வளையத்திலிருந்து ராஜா மின்னல் வேகத்தில் தப்பியோடினார். நீதிமன்ற வளாகத்திலிருந்து அவர் தப்பிச் சென்றதை அறிந்த போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.

நீதிமன்ற வளாகத்திலிருந்தே கைதி தப்பியோடிய சம்பவத்தால் மதுரை நீதிமன்றப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது. தப்பியோடிய ராஜாவைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டு, மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட எல்லைகள், பேருந்து நிலையங்கள் மற்றும் ரயில் நிலையங்களில் போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மாதம் தேனி கிளைச் சிறையிலிருந்து 17 கைதிகள் தப்பியோடிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மதுரை நீதிமன்ற வளாகத்திலிருந்தே தண்டனை கைதி தப்பியிருப்பது காவல்துறையினரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துப் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.