நீலகிரியில் கனமழையால் வீட்டின் மீது ராட்சத மரம் விழுந்து ஒருவர் படுகாயம்!

 

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, கேத்தி பகுதியில் வீட்டின் மீது ராட்சத மரம் விழுந்ததில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கேத்தி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏற்பட்ட மண் சரிவால், அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வீட்டின் மீது அருகே இருந்த ராட்சத மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து விழுந்தது. இதில் வீட்டிற்குள் இருந்த ஒருவர் பலத்த காயமடைந்தார்.

காயமடைந்தவரை அக்கம் பக்கத்தினர் உடனடியாக மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், வீட்டின் கூரையின் மீது விழுந்த மரத்தின் கிளைகளை இயந்திரங்கள் மூலம் வெட்டி அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை மற்றும் மண்சரிவு அபாயம் நிலவி வருவதால், சரிவுப் பகுதிகள் மற்றும் மரங்களின் அருகில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.