"ஒரு வாரம் கெடு.. கொஞ்சம் கூட வெட்கமில்லையா?" - போராட்டம் அறிவித்த திமுக.. தா.மோ. அன்பரசன் எச்சரிக்கை!
நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டக் கல்வெட்டில் இருந்த முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பெயர் சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில், தவெக அரசுக்கு திமுக ஒரு வாரம் கெடு விதித்துப் போராட்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுக முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் வடக்கு மாவட்டச் செயலாளருமான தா.மோ. அன்பரசன் எழுப்பியுள்ள புகாரில், கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நெம்மேலியில் அமைக்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத் தொடக்க விழா கல்வெட்டில், அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பெயர் இடம்பெற்றிருந்தது. தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில், அந்த கல்வெட்டில் இருந்த மு.க.ஸ்டாலினின் பெயர் திட்டமிட்டுச் சேதப்படுத்தப்பட்டுள்ளதாகத் திமுக தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தா.மோ. அன்பரசன், தவெக அரசின் கீழ் உள்ள துறை அதிகாரிகள் உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். "நெம்மேலி திட்டக் கல்வெட்டில் சேதப்படுத்தப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பெயரை இன்னும் ஒரு வார காலத்திற்குள் அதிகாரிகள் முறையாகச் சீரமைக்க வேண்டும். அவ்வாறு ஒரு வாரத்திற்குள் கல்வெட்டு பழையபடி சீரமைக்கப்படாவிட்டால், திமுக சார்பில் மிகப்பெரிய அளவில் கண்டனப் போராட்டம் நடத்தப்படும்."
மேலும், இது தொடர்பாகத் தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை நேரில் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாகவும், அதற்கு அவர்கள் இன்னும் ஒரு வாரத்திற்குள் கல்வெட்டு முழுமையாகச் சீரமைக்கப்படும் எனத் தன்னிடம் உறுதியளித்துள்ளதாகவும் தா.மோ. அன்பரசன் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.