இன்ஸ்டா பிரபலம் மீது ஒருதலைக் காதல்.. வீட்டிற்குள் நுழைந்து ரகளை செய்த இளைஞர் அடித்துக் கொலை!

 

சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் பிரபலமான இளம்பெண் மீது கொண்ட ஒருதலைக் காதலால், அவரது வீட்டிற்கு மதுபோதையில் சென்று தன்னைத் திருமணம் செய்து வைக்குமாறு ரகளையில் ஈடுபட்ட இளைஞர், அப்பெண்ணின் உறவினர்களால் சரமாரியாகத் தாக்கப்பட்டுச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் நேஹா பிஸ்ட். சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 6 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்கள் உள்ளனர். இவருக்குச் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், தனது திருமண ஏற்பாடுகள் தொடர்பான வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் காசிபூர் பகுதியைச் சேர்ந்தவர் அபினவ். சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த இவர், இன்ஸ்டாகிராமில் நேஹாவைத் தொடர்ந்து பின்தொடர்ந்து வந்ததுடன், அவர் மீது ஒருதலைக் காதல் கொண்டுள்ளார். நேஹாவிற்குத் திருமணம் நிச்சயிக்கப்பட்டதை அறிந்த அபினவ், அவரைத் தானே திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தில் டெல்லிக்குச் சென்றுள்ளார்.

கடந்த நவம்பர் 7-ம் தேதி டெல்லியில் உள்ள நேஹாவின் வீட்டிற்கு மதுபோதையில் சென்ற அபினவ், அங்கு ரகளையில் ஈடுபட்டுள்ளார். நேஹாவைத் தனக்குத் திருமணம் செய்து வைக்குமாறு கூறி அவர் வீட்டின் முன்பு கூச்சலிட்டுத் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அபினவின் செயலால் கடும் ஆத்திரமடைந்த நேஹாவின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள், அவரைப் பிடித்துச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். இதில் அபினவிற்குத் தலை மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

தகராறு குறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த டெல்லி காவல்துறையினர், பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அபினவை மீட்டு ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த நவம்பர் 15-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி அபினவ் பரிதாபமாக உயிரிழந்தார்.

அபினவ் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இச்சம்பவத்தைக் கொலை வழக்காக மாற்றிப் பதிவு செய்த டெல்லி போலீசார், நேஹாவின் தந்தை மற்றும் அவரது உறவினர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், நேஹா மீது அபினவ் தீவிர ஒருதலைக் காதல் கொண்டிருந்ததும், ஆனால் நேஹாவுக்கு அபினவ் குறித்து எதுவுமே தெரியாது என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.