ஒருதலைக் காதலால் விபரீதம்... கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு வாலிபர் தற்கொலை!
வேலூர் தொரப்பாடி பகுதியில் ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவியைக் கத்தியால் குத்திவிட்டு வாலிபர் தற்கொலை செய்துக் கொண்ட துயரச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
வேலூர் மாவட்டம் தொரப்பாடி பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண், அங்குள்ள ஒரு தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் அவர் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த போது, வேலூர் ஜெயில் குடியிருப்பு அருகே உள்ள ராம்சேட் நகர் பகுதியில் ஒரு இளைஞர் அவரை வழிமறித்துள்ளார். அந்த வாலிபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், மாணவியின் கழுத்து மற்றும் வயிற்றுப் பகுதியில் சரமாரியாகக் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு உடனடியாக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்த தகவல் அறிந்து வந்த பாகாயம் போலீசார், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். விசாரணையில், மாணவியைக் குத்தியவர் அரியூர் ஜீவரத்தினம் நகரைச் சேர்ந்த விக்னேஷ் (19) என்பது தெரியவந்தது. போலீசார் விக்னேஷைப் பிடிக்க அவரது வீட்டிற்குச் சென்றபோது, அங்கு அவர் தூக்கில் தொங்கிய நிலையில் மயங்கிக் கிடந்துள்ளார். போலீசாரின் விசாரணைக்குப் பயந்து அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விக்னேஷ் அந்த மாணவியை ஒருதலையாகக் காதலித்து வந்ததாகவும், மாணவி அவருடன் பேச மறுத்ததால் ஆத்திரமடைந்து இந்தக் கொடூரச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவமனையில் தீவிரச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஒருதலைக் காதலால் ஒரு உயிர் பறிபோனதுடன், ஒரு மாணவியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது வேலூர் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.