வெங்காயம் கிலோவுக்கு ரூ.10 உயர்ந்தது... மராட்டிய மழையால் வரத்து குறைவு!

 

மராட்டிய மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகப் பெரிய வெங்காயத்தின் விளைச்சல் பாதிக்கப்பட்டு, சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரும் வரத்து பாதியாகக் குறைந்துள்ளது. இதன் காரணமாகப் பெரிய வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ.10 வரை உயர்ந்துள்ளதால் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

இந்தியாவின் சமையல் தேவைகளுக்கான பெரிய வெங்காயம் பெரும்பாலும் மராட்டியம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்தே நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. 

மராட்டிய மாநிலத்தில் கொட்டித் தீர்க்கும் தென்மேற்குப் பருவமழை காரணமாக நாசிக், புனே, சோலாப்பூர் ஆகிய முதன்மைச் சந்தைகளில் வெங்காய விளைச்சல் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேடு காய்கறி சந்தைக்கு வழக்கமாக நாளொன்றுக்கு 60 முதல் 65 லாரிகளில் வந்து கொண்டிருந்த பெரிய வெங்காயம், தற்பொழுது பெய்து வரும் மழையால் வெறும் 30 முதல் 35 லாரிகளாகக் குறைந்துள்ளது. வரத்து பாதியாகக் குறைந்ததன் காரணமாக, மொத்த மற்றும் சில்லறை விற்பனைச் சந்தைகளில் பெரிய வெங்காயத்தின் விலை ஏறுமுகமாக உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ ரூ. 20 முதல் ரூ. 25 வரை விற்கப்பட்டு வந்த பெரிய வெங்காயம், தற்பொழுது கிலோவுக்கு ரூ. 10 வரை உயர்ந்து, ஒரு கிலோ ரூ. 30 முதல் ரூ. 35 என்ற விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என கோயம்பேடு சிறு மொத்த வியாபாரிகள் நலச்சங்க தலைவர் முத்துக்குமார் தெரிவித்துள்ளார். வெளிச்சந்தைகளில் இதன் விலை இதைவிடக் கூடுதலாக உள்ளது.

தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்து வருவதால், வரும் நாட்களிலும் பெரிய வெங்காயத்தின் விலை மேலும் எகிறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக வியாபாரிகள் எச்சரித்துள்ளனர். மழை நீடித்தால் கோயம்பேடு சந்தையிலேயே ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ. 50 முதல் ரூ. 60 வரை தொடுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

வெங்காயம் விலை உயர்ந்து வரும் வேளையில், தக்காளியின் வரத்து தாராளமாக உள்ளதால் அதன் விலை கணிசமாகக் குறைந்துள்ளது. சந்தையில் ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ. 10 முதல் ரூ. 20 வரையிலும், நவீன் தக்காளி ரூ. 30 முதல் ரூ. 50 வரையிலும் மலிவாக விற்பனையாகிறது. தக்காளி மற்றும் வெங்காயத்தைத் தவிர, பிற அத்தியாவசியக் காய்கறிகளின் விலையில் தற்பொழுது பெரிய அளவில் மாற்றங்கள் ஏதுமின்றித் தொடர்ந்து சீராக நீடித்து வருகிறது.

பருவமழை காரணமாகக் கோயம்பேடு வணிக வளாகப் பகுதிகளில் லாரிகள் மற்றும் நுகர்வோரின் வருகையால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்தவும், போலியான தரம் குறைந்த காய்கறி விற்பனை மோசடிகளைத் தடுக்கவும் கோயம்பேடு வர்த்தகப் பகுதி போலீசார் மற்றும் சந்தை நிர்வாகக் குழுவினர் தீவிரக் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.