சித்தா, ஆயுர்வேத மருத்துவ படிப்புகளுக்கு நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பம் தொடக்கம்!
தமிழகத்தில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, ஹோமியோபதி, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவற்றுக்கான ஆன்லைன் விண்ணப்ப விநியோகம் நாளை முதல் தொடங்குகிறது. இப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான மாணவர்கள், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnayushselection.org என்ற முகவரியில் நாளை முதல் தங்களது விண்ணப்பங்களைப் பதிவு செய்யலாம் விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜூலை 31, 2026 மாலை 5.00 மணி வரை.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இடங்கள் இந்த ஆன்லைன் கலந்தாய்வு மூலமாகவே நிரப்பப்பட உள்ளன. மொத்தம் உள்ள 5 அரசு ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 320 இடங்கள்.
மொத்தம் உள்ள 29 சுயநிதித் தனியார் ஆயுஷ் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,920 இடங்கள் (அரசு ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள்).
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகி, எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான சேர்க்கை பணிகள் நடந்து வரும் சூழலில், ஆயுஷ் படிப்புகளுக்கான இந்த சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்க, தேவையான சான்றிதழ்களுடன் ஜூலை 31-ஆம் தேதிக்குள் இணையதளம் வாயிலாக விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.