ஆன்லைனில் போதைப்பொருள் விற்ற 3 பெண் ஆசிரியைகள் ... பரபரப்பு!

 

 

கேரள மாநிலத்தில் சட்டவிரோதமாகப் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கக் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்நிலையிலும் பல்வேறு நுணுக்கமான வழிகளில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஆசிரியைகளான கீர்த்தனா, காவ்யா மற்றும் நீஷ்மா ஆகியோர் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களுக்கு நல்வழி காட்ட வேண்டிய ஆசிரியைகளே போதைப்பொருள் விவகாரத்தில் சிக்கியுள்ளது அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர்கள் மூவரும் இணைந்து இணையவழியில் கொக்கைன் உள்ளிட்ட பல ஆபத்தான போதைப்பொருட்களை விற்பனை செய்து வந்துள்ளனர். ஆன்லைன் வாயிலாகப் பலருக்கும் இரகசியமாகப் போதைப்பொருட்களைக் கடத்தி விநியோகம் செய்த அதிர்ச்சித் தகவல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவர்களின் சந்தேகத்திற்கு இடமான செயல்பாடுகளைக் கவனித்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட அதிரடிச் சோதனையில் அவர்கள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டது ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டது.இதையடுத்துப் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆசிரியைகள் 3 பேரையும் காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் யாரிடமிருந்து இந்தப் போதைப்பொருட்களை வாங்குவார்கள் மற்றும் யார் யாருக்கெல்லாம் விற்பனை செய்தனர் என விசாரணை நடக்கிறது. இப்பின்னணியில் உள்ள முக்கியப் புள்ளிகளைக் கண்டறியக் காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.