“அமோனியா கசிவால் 2 பேர் மட்டுமே உயிரிழப்பு" - அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்!
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் நச்சு வாயு கசிவு விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளதாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் பரவி வரும் செய்திகள் முற்றிலும் தவறானவை என்றும், இச்சம்பவத்தில் இதுவரை இரண்டு பெண் தொழிலாளர்கள் மட்டுமே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர் என்றும் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் அளித்துள்ளார்.
முதலமைச்சர் விஜய்யின் அவசர உத்தரவின் பேரில், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் வந்து நள்ளிரவு சிகிச்சை விபரங்களை ஆய்வு செய்த பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், பெரியபாளையம் தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேர்ந்த அம்மோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி 8 பேர் பலியானதாக வெளியான தகவல்கள் வதந்திகளே. தற்போதைய கள நிலவரப்படி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 2 பெண் தொழிலாளர்கள் மட்டுமே உயிரிழந்தனர்.
விபத்தில் நச்சு வாயுவை அதிகமாகச் சுவாசித்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் செயற்கை சுவாசக் கருவிகளின் உதவியுடன் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களில் 5 தொழிலாளர்களின் உடல்நிலை மட்டும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு மருத்துவக் குழுவினர் உயர்தரச் சிகிச்சைகளை வழங்கி வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் பெரும்பாலானோர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்குத் தங்கு தடையின்றி அதி உயர் சிகிச்சைகள் கிடைப்பதை உறுதி செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா ஆகிய மூன்று அமைச்சர்களும் ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அவசரமாக விரைந்து வந்து அங்கு முகாமிட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர்கள், சிகிச்சை முறைகளைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த 2 பெண் தொழிலாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதியையும், அவர்களின் உடல்களை முழு அரசுச் செலவில் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பவும் முதலமைச்சர் விஜய் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்கள் அனைவரும் மருத்துவமனையிலேயே தங்கியிருந்து நிலவரங்களை உடனுக்குடன் முதலமைச்சருக்குத் தெரிவித்து வருவதால், சிகிச்சைகள் போர்க்கால அடிப்படையில் முடுக்கிவிடப்பட்டுள்ளன.