45 பைசா மட்டுமே... இன்று முதல் அமலுக்கு வருகிறது - ரயில் நிலைய கவுண்டர் டிக்கெட்டுகளுக்கும் விருப்ப பயணக் காப்பீடு!

 

ரயில் நிலையங்களில் நேரடியாகக் கவுண்டர்களில் முன்பதிவு டிக்கெட் வாங்கும் பயணிகளுக்கும் விருப்பப் பயணக் காப்பீடு (Optional Travel Insurance) திட்டம் அமலுக்கு வருவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.

இதுவரை IRCTC இணையதளம் மற்றும் செயலிகளில் ஆன்லைனில் டிக்கெட் புக் செய்பவர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்த இந்த வசதி, இனி கவுண்டர் டிக்கெட்டுகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ரயில் பயணத்தின்போது அசம்பாவிதங்கள் அல்லது விபத்துகள் நேரிட்டால், பயணிக்கு அதிகபட்சமாக ₹10 லட்சம் வரை இழப்பீடு கிடைக்கும்.

உயிரிழப்பு / நிரந்தர ஊனம்: ₹10 லட்சம். பகுதி நேர ஊனம்: ₹7.50 லட்சம். மருத்துவச் செலவுகள்: ₹2 லட்சம் வரை. பிரீமியம் 45 பைசா - ஆன்லைன் கட்டணம் கட்டாயம். இந்தக் காப்பீட்டிற்கான பிரீமியம் தொகை நபர் ஒன்றுக்கு 45 பைசா மட்டுமே.

இருப்பினும், 45 பைசாவை ரொக்கமாகப் பெற முடியாது என்பதால், காப்பீட்டு வசதியைத் தேர்ந்தெடுக்கும் பயணிகள், டிக்கெட் கட்டணம் மற்றும் பிரீமியம் முழுவதையும் டிஜிட்டல் / ஆன்லைன் முறையில் (UPI, கார்டு போன்றவை) மட்டுமே செலுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவுண்டரில் முன்பதிவு படிவத்தை நிரப்பும்போது பயணக் காப்பீடு தேவையா என்பதைத் தனியாகக் குறிப்பிட வேண்டும். விண்ணப்பப் படிவத்தில் சரியாக மொபைல் எண்ணைக் குறிப்பிட வேண்டியது கட்டாயமாகும். டிக்கெட் பதிவு செய்யப்பட்டதும், காப்பீட்டு பாலிசி விவரங்கள் குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்படும்.