தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்திற்கு 500 பேருக்கு மட்டுமே அனுமதி - நுங்கம்பாக்கத்தில் பலத்த பாதுகாப்பு!

 

தமிழகச் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில அளவிலான நிர்வாகிகள் மற்றும் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டம் வரும் ஞாயிற்றுக்கிழமைநடைபெறுகிறது.

நுங்கம்பாக்கம் தாஜ் கோரமண்டல் ஹோட்டலில், மார்ச் 29ம் தேதி காலை 11 மணிக்கு தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விஜய் முறைப்படி அறிமுகம் செய்து வைக்கிறார். பெரம்பூர் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட சூழலில், இந்தக் கூட்டத்தைப் பாதுகாப்பாகவும் நேர்த்தியாகவும் நடத்தத் தவெக தலைமை திட்டமிட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தலைமைக் கழக நிர்வாகிகள், அறிவிக்கப்பட்ட 234 வேட்பாளர்கள் மற்றும் சிறப்பு அனுமதி பெற்ற கழகத்தினர் என மொத்தம் 500 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட 500 நபர்களைத் தவிர்த்து, வேறு எவருக்கும் அனுமதி இல்லை என்பதால், தொண்டர்கள் அந்த இடத்திற்கு வந்து கூட்ட நெரிசலைத் தவிர்க்க வேண்டும் எனப் பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் இந்த நிகழ்விற்குக் காவல்துறை மற்றும் தவெக-வின் தன்னார்வப் பாதுகாப்புப் படையினர் இணைந்து பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

ஏற்கனவே பிரச்சார அனுமதி தொடர்பான சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், தவெக தனது ஒட்டுமொத்த வேட்பாளர் பட்டியலை ஒரே மேடையில் அறிமுகம் செய்வது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கூட்டத்திற்குப் பிறகு வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரத்தைத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.