"வருஷத்துக்கு வட்டி மட்டுமே ரூ.67,000 செலுத்தப்படுகிறது" - நிதிச் சீரழிவை பட்டியலிட்ட அமைச்சர் மரிய வில்சன்!

 

தமிழகத்தின் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கையைத் தலைமைச் செயலகத்தில் வெளியிட்ட நிதியமைச்சர் என். மரிய வில்சன், முந்தைய திமுக அரசின் தவறான நிதி மேலாண்மை காரணமாக மாநிலத்தின் சொந்த வரி வருவாயில் மூன்றில் ஒரு பங்கு வெறும் வட்டி கட்டுவதற்கே வீணடிக்கப்படுவதாகக் கூறி அதிர்ச்சியூட்டும் விபரங்களை வெளியிட்டுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பில் நிதியமைச்சர் மரிய வில்சன் வெளியிட்ட முக்கியப் புள்ளிவிவரங்களில்,  தமிழ்நாடு அரசு வாங்கியுள்ள கடன்களுக்காக ஆண்டுக்குச் சராசரியாக ரூ. 67,000 கோடி வட்டி மட்டுமே செலுத்தப்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்த வட்டிச் செலவினம் மட்டும் 61 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வருவாய் வரவில் 22.8 சதவீதம் வட்டிச் செலவிற்கே சென்றுவிடுகிறது. மேலும், தவிர்க்க முடியாத இதர செலவுகள் 64.4 சதவீதமாக உள்ளது. இதனால், புதிய பாலங்கள், சாலைகள் போன்ற உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான மூலதனச் செலவினம் தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.

கடந்த 2021-ஆம் ஆண்டில் ரூ. 5 லட்சம் கோடியாக இருந்த கடன், 2026-ல் ரூ. 10 லட்சம் கோடியாக உயர்ந்தது. முந்தைய அரசு கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 4.87 லட்சம் கோடி புதிய கடனைச் சேர்த்துள்ளது.

மாநிலத்தின் சொந்த வரி வருவாய் இந்தியாவின் சராசரியை விடக் குறைந்து, வரலாறு காணாத வீழ்ச்சியைச் சந்தித்ததற்கான காரணங்களையும் அமைச்சர் பட்டியலிட்டார். 

கடந்த ஆட்சியில் கனிம வளத்துறையில் நடைபெற்ற முறைகேடுகளும் ஊழல்களுமே மாநிலத்தின் வருவாய் இழப்புக்கு முதன்மையான காரணமாகும். சந்தை நிலவரத்திற்கு ஏற்ப நிலங்களின் வழிகாட்டு மதிப்புகள் (Guideline Value) முறையாகத் திருத்தப்படவில்லை. முத்திரைத்தாள் கட்டணம் சந்தை மதிப்பை விட மிகக் குறைவாக உள்ளதால், சொத்துப்பதிவுத் துறையில் தொடர்ந்து வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் மொத்த கடன் சதவீதம் மிக அதிகமாக உள்ளதாகப் பொருளாதார ஒப்பீட்டை அமைச்சர் முன்வைத்தார்.

"தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும், மற்ற அண்டை மாநிலக் குழந்தைகளை விட மிக அதிகமான கடன் சுமையுடன் பிறக்கும் அவலநிலை உருவாகியுள்ளது. கடந்த 2021-ல் ரூ. 46,538 கோடியாக இருந்த வருவாய் பற்றாக்குறை, 2026-ல் ரூ. 78,324 கோடியாக உயர்ந்து மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் வரம்பை மீறியுள்ளது."

ஒரு காலத்தில் இந்தியாவின் அதிக வருவாய் கொண்ட முதன்மை மாநிலமாகத் திகழ்ந்த தமிழ்நாடு, கடந்த 5 வருட திமுக ஆட்சியில் முதலீடுகளுக்காகக் கடன் வாங்காமல், அன்றாட நிர்வாகச் செலவுகளுக்காக மட்டுமே கடன் வாங்கி இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் மரிய வில்சன் சாடியுள்ளார்.