அச்சச்சோ... தமிழகத்தில் வீரியமிக்க பறவைக் காய்ச்சல் உறுதி... 39,000 கோழிகள் உயிருடன் புதைக்கப்பட்டு அழிப்பு!
கடலூர் மாவட்டத்தில் வீரியமிக்க பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, நோய் மேலும் பரவாமல் தடுக்கும் பொருட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிகள் உயிருடன் குழிகளில் புதைக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
கடலூர் மாவட்டத்திலுள்ள நொச்சிக்காடு, தியாகவல்லி மற்றும் கட்டியங்குப்பம் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் உள்ள தனியார் கோழிப் பண்ணைகளில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 40 ஆயிரத்திற்கும் அதிகமான கோழிகள் திடீரெனக் கொத்துக்கொத்தாகச் செத்து விழுந்தன.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த கால்நடை பராமரிப்புத்துறை அதிகாரிகள் உடனடியாகப் பண்ணைகளுக்கு விரைந்து சென்று ஆய்வு நடத்தினர். மேலும், இறந்த கோழிகளின் உடல் மாதிரிகளை ஈரோடு, நாமக்கல், சென்னை மற்றும் போபாலில் உள்ள மத்திய ஆய்வகங்களுக்குப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
போபாலில் உள்ள மத்திய ஆய்வகத்திலிருந்து வந்த பரிசோதனை முடிவுகளில், கட்டியங்குப்பம் கிராமத்திலுள்ள பண்ணையில் 'ஹைலி பேத்தோஜெனிக் ஏவியன் இன்ப்ளூயன்ஸா' எனப்படும் வீரியமிக்க பறவைக் காய்ச்சல் தாக்கியிருப்பது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.
நோய்த்தொற்று அருகில் உள்ள மற்ற பண்ணைகளுக்கும், மனிதர்களுக்கும் பரவுவதைத் தடுத்திடும் வகையில் மாவட்ட நிர்வாகம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
கட்டியங்குப்பம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பண்ணைகளில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட சுமார் 34 ஆயிரத்திற்கும் அதிகமான கோழிகள் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் பெரிய பள்ளங்கள் தோண்டப்பட்டு, ப்ளீச்சிங் பவுடர் தூவப்பட்டு உயிருடன் பாதுகாப்பாகப் புதைக்கப்பட்டன. இதன் ஒரு பகுதியாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கடலூர் மத்திய சிறை வளாகத்தில் வளர்க்கப்பட்டு வந்த 5 ஆயிரம் கோழ்களும் சேர்த்து அழிக்கப்பட்டுப் புதைக்கப்பட்டன. ஒட்டுமொத்தமாக மாவட்டத்தில் 39 ஆயிரம் கோழிகள் அழிக்கப்பட்டுள்ளன.
பறவைக் காய்ச்சல் எதிரொலியாகக் கடலூர் மாவட்டத்தின் மற்ற கோழிப் பண்ணைகளிலும் கால்நடைப் பராமரிப்புத் துறையினர் தீவிரக் கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள பத்துக் கிலோமீட்டர் சுற்றளவுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கோழிகள் மற்றும் இறைச்சி வெளியூர்களுக்குக் கொண்டு செல்வது தற்காலிகமாகத் தடை செய்யப்பட்டுள்ளது.