அச்சச்சோ... மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. 10 நாட்களில் 2 பேர் பலி; ஆந்திராவில் 8 பேர் தனிமைப்படுத்தல்!

 

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக 2 பேர் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து, மாநில சுகாதாரத் துறை ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் தீவிர முன்னெச்சரிக்கை மற்றும் தயார்நிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

கடப்பா மற்றும் அண்ணமய்யா ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் வீதம் கடந்த 10 நாட்களில் 2 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். இதில் ஒருவர் கடப்பா நகரைச் சேர்ந்த 43 வயதுடைய நபர் ஆவார். இவர் கடுமையான நுரையீரல் தொற்றுக் காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்றொருவர் அண்ணமய்யா மாவட்டத்தின் இராஜம்பேட்டையைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்த இரண்டு மரணங்களைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், இதுவரை 8 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்பொழுது தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள இந்த 8 பேரும் எவ்வித அறிகுறியுமின்றி, மருத்துவரீதியாக தங்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுத் தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட நபர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த முதன்மை மற்றும் இரண்டாம் நிலைத் தொடர்பாளர்களைக் கண்டறியும் பணியில் சுகாதாரத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். கடப்பாவில் உயிரிழந்த நபருடன் தொடர்பில் இருந்த 28 பேரை அதிகாரிகள் கண்டறிந்து, அவர்களுக்குக் கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு கண்காணித்து வருகின்றனர்.

திடீர் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தவும், அவசரச் சூழலை எதிர்கொள்ளவும் ஆந்திர அரசு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது: இந்தத் தொற்றுப் பரவல் மற்றும் மரணங்கள் குறித்து விரிவான ஆய்வு செய்ய ஒரு 'விரைவு அதிரடிக் குழு' அமைக்கப்பட்டுள்ளதுடன், நிலைமையைக் கண்காணிக்கக் 'கொரோனா கட்டுப்பாட்டு அறை' திறக்கப்பட்டுள்ளது.

மாநிலத்தின் அனைத்து அரசு பொது மருத்துவமனைகளிலும் தலா 10 படுக்கைகள் கொண்ட பிரத்யேகக் கொரோனா தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை உடனடியாகத் தயார் நிலையில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. போதிய அளவிலான ஆர்டி-பிசிஆர் பரிசோதனைக் கருவிகள், ரெம்டெசிவிர் மருந்துகள், தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் முகக்கவசங்களை போதிய அளவில் இருப்பு வைக்க மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பொது மருத்துவமனைகளின் கண்காணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட மாதிரிகள், தற்பொழுது பரவி வரும் உருமாறிய கொரோனா வைரஸின் தன்மையைக் கண்டறிவதற்காகப் புனேயில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வு நிறுவனத்திற்கு மரபணு சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன. அதிகாரிகள் இந்தத் தொற்றுப் பரவல் தற்காலிகமாக ஆங்காங்கே ஏற்படும் ஒரு சாதாரண நிகழ்வே என்பதால் பொதுமக்கள் யாரும் தேவையற்ற பீதியடைய வேண்டாம் என்றும், அதே வேளையில் முகக்கவசம் அணிவது மற்றும் பொதுச் சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றுவது நல்லது என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.