அச்சச்சோ... அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடக்கு இந்தியப் பெருங்கடலில் 3 தீவிர புயல்கள் - இஸ்ரோ எச்சரிக்கை!

 

வரும் மாதங்களில் வட இந்தியப் பெருங்கடல் பகுதியில் வழக்கத்தை விடக் கூடுதல் தீவிரத்தன்மையுடன் மூன்று சக்திவாய்ந்த புயல்கள் உருவாகக்கூடும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) எச்சரித்துள்ளது.

இந்த ஆண்டு அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான பருவமழைக்குப் பிந்தைய காலகட்டத்தில் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளை உள்ளடக்கிய வடக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் மூன்று தீவிர புயல்கள் உருவாக வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 44 ஆண்டுகளின் வரலாற்றுச் சராசரியோடு ஒப்பிடும்போது, இந்த ஆண்டு உருவாகும் புயல்களின் ஆற்றல் விரயக் குறியீடு சுமார் 83 சதவீதம் வரை அதிகரித்து அதாவது 13.06 மில்லியன் நாட்ஸ் அளவை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஒடிசா, வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட கடலோரப் பகுதிகள் அதிகக் காற்று, தீவிரப் புயல் அலைகள் மற்றும் பலத்த கனமழையை எதிர்கொள்ள நேரிடலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

பேரிடர் மேலாண்மை அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட கடலோர மாநில அரசுகள் தற்காப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும், உரிய முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் இஸ்ரோ தனது செயற்கைக்கோள் மற்றும் வானிலை ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.