அச்சச்சோ... நேபாளத்தில் மீண்டும் வெள்ளம் ஏற்பட வாய்ப்பு - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!
நேபாளத்தின் ரசுவா மாவட்டத்தில் ஏற்கனவே கோரப் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் இரண்டாவது முறையாக மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
நேபாள-சீன எல்லைக்கு அருகில் நீரோட்டத்தின் மேல்பகுதியில் அடைப்பு இன்னும் நீடிப்பதால், அது இரண்டாவது முறையாகப் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என ஐசிஐஎம்ஓடி அமைப்பு எச்சரித்துள்ளது.
இமயமலைப் பிராந்தியத்தின் எட்டு நாடுகளுக்குச் சேவை செய்யும் காத்மாண்டுவைத் தலைமையிடமாகக் கொண்ட சர்வதேச ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டு மையமான இந்த அமைப்பு, பனியாறுகள் மற்றும் பேரிடர் அபாயங்கள் குறித்து இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.
கல்ச்சியில் உள்ள திரிசூலி ஆற்றில் வெறும் 30 நிமிடங்களுக்குள் நீர்மட்டம் 9 மீட்டர் வரையிலும், மாலேகுவில் 7 மீட்டர் வரையிலும் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. மலைகளின் உயரமான பகுதிகளில் ஏற்பட்ட பனிப்பாறைச் சரிவே இந்த திடீர் வெள்ளத்திற்குக் காரணமாக இருக்கலாம் என நம்பப்படுகிறது.