“அச்சச்சோ... ‘கோல்ட் ப்ளாப்’ உருவாகுது... பூமிக்கு புதிய ஆபத்து” - விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

 

உலகம் முழுவதும் புவி வெப்பமயமாதல் காரணமாகச் சராசரி வெப்பநிலை 1 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்து, பனிப்பாறைகள் உருகி வரும் வேளையில், அதற்கு முற்றிலும் முரணாக பூமியின் ஒரு பகுதியில் மட்டும் படுபயங்கரக் குளுமை நிலவி வருவது சர்வதேச விஞ்ஞானிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வடக்கு அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட கடல் பரப்பில் மட்டும், வழக்கமான வெப்பநிலையை விடச் சற்றேறக்குறைய 0.9 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை திடீரெனக் குறைந்து, கடுமையான குளுமை நிலவி வருவதை ஆய்வாளர்கள் தங்களது புதிய செயற்கைக்கோள் ஆய்வில் துல்லியமாகக் கண்டறிந்துள்ளனர். இந்த விசித்திரமான குளிர்ந்த பகுதிக்கு விஞ்ஞானிகள் "கோல்ட் ப்ளாப்" எனப் பெயரிட்டுள்ளனர்.

பூகோள ரீதியாக உலக நாடுகளின் வெப்பநிலையைச் சீராக வைக்கும் அட்லாண்டிக் பெருங்கடலின் பிரதான கடல் நீரோட்டங்கள் தற்போது கடுமையான மந்தநிலையைச் சந்தித்து வருவதே, இந்த ஆபத்தான குளுமைப் பகுதி உருவாவதற்கு மிக முக்கியக் காரணம் என்று கடல்சார் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

உலகமே வெப்பமடையும் போது, இந்த ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் நீரோட்டங்கள் தடைபடுவதால் ஒட்டுமொத்த பூமியின் காலநிலை சமநிலையும் அடியோடு சீர்குலையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த 'கோல்ட் ப்ளாப்' நிலை இப்படியே இன்னும் சில காலத்திற்குத் தொடர்ந்தால், அதன் விபரீத விளைவாக இந்தியா உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் பருவமழைப் பொழிவு குறைய வாய்ப்புள்ளது.

இதனால் பல மாநிலங்களில் கடுமையான வறட்சி மற்றும் குடிநீர் பஞ்சம் ஏற்படுவது ஒருபுறமிருக்க, மறுபுறம் சில பகுதிகளில் கணிக்க முடியாத அளவிற்கு அதீத மேகவெடிப்பு மற்றும் பெருமழை கொட்டித் தீர்க்கும். இத்தகைய தீவிர மற்றும் விபரீதமான காலநிலை மாற்றங்கள் உலகளாவிய உணவு உற்பத்தியையும் மனித வாழ்வாதாரத்தையும் அச்சுறுத்தும் என்பதால், சர்வதேச நாடுகள் தற்பொழுதே சுற்றுச்சூழல் பாதுகாப்பில் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.