ஊட்டியில் வாட்டி எடுக்கும் குளிர் ... 4.4 டிகிரியாக குறைந்த வெப்பநிலை
நீலகிரி மாவட்டத்தைக் கடும் குளிர் அலை வாட்டி எடுத்து வரும் நிலையில், பிரபல சுற்றுலாத் தலமான ஊட்டியில் இன்று குறைந்தபட்ச வெப்பநிலை 4.4 டிகிரி செல்சியஸாகக் குறைந்துள்ளது. கடந்த சில தினங்களாக நிலவும் கடும் குளிரால் அங்கு இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கந்தல், கிளென்மார்கன் மற்றும் தலைகுந்தா போன்ற தாழ்வான பகுதிகளில் அதிகாலை நேரங்களில் கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் அப்பகுதிகளின் நிலப்பரப்பு வெண்பனியால் போர்த்தப்பட்டது போல் அழகாகக் காட்சியளிக்கிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பனிப்பொழிவில் இருந்து புல்வெளிகளைப் பாதுகாக்கப் பணியாளர்கள் அதிகாலையில் தண்ணீர் தெளித்துப் பனிப்படலத்தை நீக்கி வருகின்றனர்.
வெப்பநிலை குறைந்ததால் கம்பளித் தொப்பி, கையுறை மற்றும் குளிர்கால ஆடைகளை மக்கள் அதிக அளவில் வாங்கிச் செல்வதால் சாலையோர வியாபாரம் சூடுபிடித்துள்ளது. மறுபுறம், பனியால் மூடப்பட்ட புல்வெளிகளைப் படம்பிடிக்கக் கேரளா மற்றும் கர்நாடகாவில் இருந்து ஏராளமான புகைப்படக் கலைஞர்கள் நீலகிரியில் குவிந்து வருகின்றனர்.மேலும், பனி மூடிய புல்வெளிகளுக்கு நீலகிரிப் பறவைகள் மற்றும் உள்நாட்டு வலசைப் பறவைகளின் வருகையும் அதிகரித்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்