ஊட்டி மலை ரயில் நவம்பர் 13 வரை ரயில் சேவை ரத்து !
நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக, மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான மலை ரயில் சேவை மேலும் 3 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.நீலகிரி மலைப்பாதையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் மலை ரயில் தண்டவாளத்தில் பெரிய பாறைகள், மண் மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, மேட்டுப்பாளையம் – உதகை இடையேயான வழக்கமான மலை ரயில் சேவை மற்றும் சிறப்பு மலை ரயில் சேவை ஏற்கெனவே நவம்பர் 10-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது.
தற்போது மலை ரயில் பாதையில் சீரமைப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இருப்பினும், கனமழை நீடிப்பதால் மீண்டும் மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது.இதனைத் தொடர்ந்து, பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இன்று (நவம்பர் 11) முதல் நவம்பர் 13-ம் தேதி வரை மலை ரயில் சேவையை ரத்து செய்வதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதனால் ஊட்டி மலை ரயிலில் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் தங்களது பயணத் திட்டத்தை மாற்றியமைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ரயில் சேவை மீண்டும் தொடங்குவது குறித்த அறிவிப்பை தெற்கு ரயில்வே வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.