குறுகிய மண் சாலையில் எதிரே வந்த யானை… வனத்துறை ஜீப்பைக் கவிழ்த்ததில் 4 பேர் படுகாயம்!

 

 

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த வனத்துறையினரின் ஜீப்பைக் காட்டு யானை முட்டிக் கவிழ்த்ததில், வனக்காவலர் உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

ஊட்டி அருகே சோலூர், கோக்கால், சூட்டிங்மட்டம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10 வயதுடைய ஆண் காட்டு யானை ஒன்று கடந்த சில நாட்களாகச் சுற்றித்திரிந்து வருகிறது. இந்த யானை விவசாயத் தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்தியதால், அதனை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில், சாண்டிநல்லா பகுதியில் யானை சாலையோரம் நிற்பதாக வாகன ஓட்டிகள் அளித்த தகவலின் பேரில் வனத்துறையினர் ரோந்துக்குச் சென்றனர். அப்போது 8-வது மைல் பகுதியில் தோடர் கிராமத்துக்குச் செல்லும் குறுகிய மண் சாலையில் ஜீப் சென்றபோது, எதிரே யானை வந்துள்ளது. செல்ல வழியில்லாததால் ஜீப்பை யானை முட்டிக் கவிழ்த்துவிட்டு வனப்பகுதிக்குள் சென்றது.

காயமடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.வனச்சரகர் ராம்பிரகாஷ் கூறுகையில், அந்த யானை பொதுவாக அமைதியான குணம் கொண்டது என்றும், சம்பவத்தின்போது திரும்பிச் செல்ல வழியில்லாததால் ஜீப்பைத் தாக்கியிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்