ஆஸ்திரேலிய அரசு இணையதளத்துக்குள் நுழைந்த AI! இந்தியாவுக்கு எச்சரிக்கை!

 

 

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், AI Agent ஒன்று ஆஸ்திரேலிய அரசின் Medicare புள்ளிவிவர இணையதளத்தில் பாதுகாப்பு தடைகளை தாண்டி அனுமதியின்றி தகவல்களை அணுகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனீஸ் வெளியிட்ட தகவலின்படி, கடந்த ஜூன் 18-ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. பொதுமக்களின் மருத்துவச் செலவுகள் மற்றும் சுகாதார புள்ளிவிவரங்கள் தொடர்பான தகவல்களைத் தேடும் பணியில் OpenAI-ன் AI Agent ஈடுபடுத்தப்பட்டது.

அப்போது இணையதளத்தில் சில தகவல்களை அணுகுவதற்கு தடைகள் இருந்த நிலையில், AI Agent அந்த தடைகளை கடந்து non-public பகுதிகளில் இருந்த சில கோப்புகள் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட சுகாதார புள்ளிவிவரங்களை அணுகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உள்நாட்டு சர்வரில் கோப்புகளை எழுதும் செயல்பாடும் நடந்ததாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

allowfullscreen

எனினும், தனிநபர்களின் Medicare மருத்துவப் பதிவுகள் அல்லது தனிப்பட்ட தகவல்கள் அணுகப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்று OpenAI தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆஸ்திரேலிய அரசு விரிவான விசாரணையை தொடங்கியுள்ளது. மேலும், இதுபோன்ற AI தொடர்பான சைபர் சம்பவங்களை ஆய்வு செய்ய சிறப்பு பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து OpenAI கூறுகையில், ஆஸ்திரேலியாவின் பல்வேறு அரசு இணையதளங்கள் மற்றும் சேவைகளில் தகவல்களைத் தேடும் பணியின்போது, தாங்கள் எதிர்பார்க்காத சில நடவடிக்கைகளை AI மாடல்கள் மேற்கொண்டதாக தெரிவித்துள்ளது. சம்பவம் தொடர்பான ஆய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதையடுத்து, AI Agent-களுக்கு அதிகமான தன்னாட்சி வழங்கும்போது ஏற்படக்கூடிய சைபர் பாதுகாப்பு ஆபத்துகள் குறித்து சர்வதேச அளவில் கவனம் திரும்பியுள்ளது.

இந்தியாவுக்கும் இதுபோன்ற சம்பவம் ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என AI பாதுகாப்பு நிபுணர்கள் கூறியுள்ளனர். குறிப்பாக அரசு இணையதளங்கள், முக்கிய தரவுத்தளங்கள் மற்றும் முக்கியமான உள்கட்டமைப்புகளில் AI கருவிகளுக்கான அணுகல் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து கூடுதல் கவனம் தேவை என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய சம்பவம் தற்போது விசாரணையில் இருப்பதால், AI Agent திட்டமிட்டு சைபர் தாக்குதல் நடத்தியது என முடிவு செய்ய முடியாது. ஆனால், மனிதர்கள் வழங்கிய பணியை நிறைவேற்றும் முயற்சியில் AI பாதுகாப்பு கட்டுப்பாடுகளைத் தாண்டிச் சென்றிருப்பது, எதிர்கால AI பாதுகாப்பு தொடர்பான முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.