'ஆபரேஷன் ஹிம் சேது': சிக்கிமில் நிலச்சரிவில் சிக்கித் தவித்த 1,321 சுற்றுலாப் பயணிகள் மீட்பு - ராணுவத்தின் அசாத்திய வீரத்தால் உயிர் தப்பிய மக்கள்! 

 

சிக்கிம் மாநிலத்தின் மங்கன் மாவட்டத்தில் உள்ள லாச்சென் பகுதியில் கடந்த சில நாட்களாகப் பெய்த கனமழை மற்றும் பனிப்பொழிவு காரணமாகப் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் சாலைத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அங்கேயே சிக்கிக் கொண்டனர்.

சுற்றுலாப் பயணிகளை மீட்க இந்திய ராணுவத்தின் 'திரிசக்தி கார்ப்ஸ்' பிரிவு 'ஆபரேஷன் ஹிம் சேது' என்ற பெயரில் மீட்புப் பணியைத் தொடங்கியது. மிக மோசமான வானிலை மற்றும் கடும் பனிப்பொழிவுக்கு மத்தியிலும், கடந்த 48 மணி நேரமாகத் தொடர்ந்து நடைபெற்ற இந்தப் பணியில், 1,321 சுற்றுலாப் பயணிகள் மற்றும் 84 உள்ளூர் மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

தரம் சூ பகுதியில் சாலை துண்டிக்கப்பட்ட இடத்தில், ராணுவத்தினர் மற்றும் எல்லைச் சாலைகள் அமைப்பின் அதிகாரிகள் ஒரு தற்காலிக நடைபாலத்தை அமைத்து, அதன் மூலம் மக்களைக் பாதுகாப்பாக அப்புறப்படுத்தினர். மீட்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளை தரம் சூ பகுதியிலிருந்து சுங்தாங் வரையிலும், அங்கிருந்து மாநிலத் தலைநகரான காங்டாக்கிற்கும் அழைத்துச் செல்ல சிறப்புப் பேருந்துகள் மற்றும் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் மருத்துவ உதவிகளை ராணுவம் வழங்கியது.

மீட்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அந்தத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், சிக்கிம் சமூக நலத்துறை அமைச்சருமான சம்டுப் லெப்சா, மீட்புக் களத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். ராணுவம், எல்லைச் சாலைகள் அமைப்பு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஒருங்கிணைந்த முயற்சியைப் பாராட்டிய அவர், வீரர்களுக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

தற்போது நிலைமை சீராகி வரும் நிலையில், பாதுகாப்பு கருதி லாச்சென் பகுதிக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கான அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.