ஒரு பைசா செலவில்லாமல் காசி, அயோத்தி செல்ல வாய்ப்பு - விண்ணப்பிக்க நாளை கடைசி தேதி... மிஸ் பண்ணாதீங்க!
தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையிலான பல்லாயிரம் ஆண்டுகாலக் கலாச்சார மற்றும் ஆன்மீகப் பிணைப்பைப் போற்றும் வகையில், மத்திய கல்வி அமைச்சகத்தால் நடத்தப்படும் 'காசி தமிழ் சங்கமம் 5.0' நிகழ்வில் பங்கேற்று இலவசமாகப் புனித யாத்திரை செல்ல விண்ணப்பிக்க நாளை கடைசி நாளாகும்.
மத்திய அரசின் முழு நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் சுமார் 1,400 பேர் (ஒரு குழுவுக்கு 200 பேர் வீதம் 7 குழுக்கள்) முற்றிலும் இலவசமாக காசி உள்ளிட்ட புனிதத் தலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
ஒவ்வொரு குழுவினருக்கும் மொத்தம் 8 நாட்கள் பயணம் (4 நாட்கள் ரயில் பயணம் + 4 நாட்கள் தரிசனம் மற்றும் நிகழ்ச்சிகள்). இதில் வாரணாசி (காசி விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி கோவில்கள் மற்றும் கங்கை நீராடல்), பிரயாக்ராஜ் மற்றும் அயோத்தி ஆகிய இடங்களைப் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பாரத் கௌரவ் சிறப்பு சுற்றுலா ரயில் பயணம், தங்குமிடம், மூன்று வேளை உணவு மற்றும் கோவில்களில் சிறப்பு தரிசனம் எனத் தமிழ்நாடு திரும்பும் வரை ஒரு ரூபாய் கூடச் செலவில்லாமல் மத்திய அரசே அனைத்துச் செலவுகளையும் ஏற்கிறது.
மாணவர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள், விவசாயிகள், கைவினைஞர்கள், பெண்கள் மற்றும் ஆன்மிகப் பிரதிநிதிகள் இத்திட்டத்தில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்திற்கு ஆன்லைன் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்களுக்கு இணையவழியில் திருக்குறள் சார்ந்த வினாடி வினா நடத்தப்பட்டு, அதன் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
அதிகாரப்பூர்வ 'காசி தமிழ் சங்கமம்' இணையதளத்திற்குச் சென்று, முகப்புப் பக்கத்தில் உள்ள பதிவு பொத்தானைக் கிளிக் செய்யவும். உங்களது பெயர், தொடர்பு எண் மற்றும் நீங்கள் சார்ந்த பிரிவைத் தேர்ந்தெடுத்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
அடையாளச் சான்று, கல்வித் தகுதி அல்லது தொழில் சார்ந்த விவரங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்கவும். விண்ணப்பித்த 24 மணி நேரத்திற்குள் உங்கள் மின்னஞ்சலுக்கு உறுதிப்படுத்தல் தகவல் அனுப்பப்படும். அதனைத் தொடர்ந்து தேர்வுக்கான வினாடி வினா விவரங்கள் மின்னஞ்சலில் பகிரப்படும்.
இந்த வாய்ப்பைப் பயன்படுத்திப் புனித யாத்திரை செல்ல விரும்பும் பொதுமக்கள் நாளை நவம்பர் 13ம் தேதிக்குள் தவறாமல் ஆன்லைனில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.