எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு.. FCRA மசோதா கூட்டுக்குழுவுக்கு அனுப்பிவைப்பு!
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டத் திருத்த மசோதா விரிவான பரிசீலனைக்காக 31 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத் திருத்தம் சிறுபான்மையினர் நடத்தும் தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகளைக் குறிவைத்து முடக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் காங்கிரஸ் எம்பி கே.சி.வேணுகோபால், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மற்றும் திமுக எம்பி டி.ஆர்.பாலு உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டினர். எனவே இம்மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை மறுத்தார். வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் நிதியை முறைப்படுத்தவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் சட்ட விதிகள் அவசியம் என்றும், இதில் சிறுபான்மையினருக்கு எதிராக எந்த நிபந்தனையும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
மக்களவையிலிருந்து 21 உறுப்பினர்கள் மற்றும் மாநிலங்களவையிலிருந்து 10 உறுப்பினர்கள் என மொத்தம் 31 உறுப்பினர்கள் இக்குழுவில் இடம் பெறுவர். இக்கூட்டுக்குழு இம்மசோதா குறித்து விரிவாக ஆய்வு செய்து, 2026-ஆம் ஆண்டின் குளிர்காலக் கூட்டத்தொடரின் முதல் வாரத்தின் கடைசி நாளுக்குள் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.