டிஜிட்டல் முறையில் லைசென்ஸ் வழங்க எதிர்ப்பு... 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

 

ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் வழங்கும் நடைமுறைக்குத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஓட்டுநர் உரிமம், ஆர்சி சான்று போன்ற ஆவணங்களை டிஜிட்டல் முறையில் பொதுமக்களே பதிவிறக்கம் செய்யும் புதிய நடைமுறைக்கு எதிராக பெங்களூருவைச் சேர்ந்த 'ஃபோர்ஸ் ஐடென்டிஃபிகேசன் லிமிடெட்' நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த டிஜிட்டல் மயமாக்கல் மத்திய அரசின் சட்டங்களுக்கு விரோதமானது என்றும், ஸ்மார்ட்போன் மற்றும் இன்டர்நெட் வசதி இல்லாதவர்கள் இதனால் தங்களது ஆவணங்களைப் பெற முடியாது என்பதால் அச்சிட்டு வழங்கும் வழக்கமான முறையையும் சேர்த்துப் பின்பற்ற வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன்பு ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், ராஜஸ்தான், கேரளம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களைத் தொடர்ந்து தமிழகம் 7-ஆவது மாநிலமாக இந்த டிஜிட்டல் முறைக்கு மாறுவதாகவும், ஊழலை ஒழித்துச் சேவைகளை விரைவுபடுத்தவே இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், ஆவணங்களை இ-சேவை மையங்கள் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து அச்சிட்டுக் கொள்ளலாம் என விளக்கம் அளித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்ட நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக இரண்டு வாரங்களுக்குள் விரிவான பதிலைத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.