காதலுக்கு எதிர்ப்பு... அக்காவின் கழுத்தை நெரித்துக் கொன்ற 2 தம்பிகள் - உடலைத் தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடியது அம்பலம்!

 

உத்தரப் பிரதேச மாநிலம் படோஹி மாவட்டத்தில் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துச் சொந்த அக்காவைத் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததோடு, அதனைத் தற்கொலை என நம்ப வைப்பதற்காக அவரது உடலைத் தூக்கில் தொங்கவிட்டு நாடகமாடிய இரண்டு இளைய சகோதரர்களைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலம் இந்தப் பயங்கர ஆணவக் கொலைச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் படோஹி மாவட்டத்தில் உள்ள ஜகோன் கிராமத்தைச் சேர்ந்தவர் குஷி பிந்த். கடந்த நவம்பர் 4-ஆம் தேதி, குஷி பிந்த் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். சம்பவம் குறித்துத் தகவல் அறிந்து வந்த காவல்துறையினரிடம், குஷியின் இரண்டு இளைய சகோதரர்களும் தங்கள் அக்கா தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்தின் பேரில் குஷியின் உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில், குஷி தூக்குப்போட்டுத் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்பதும், அவர் கழுத்து நெரிக்கப்பட்டு மூச்சுத் திணறடிக்கப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்பதும் மருத்துவ அறிக்கையில் உறுதியானது.

பிரேத பரிசோதனை அறிக்கையைத் தொடர்ந்து, குஷியின் குடும்பத்தினரிடம் காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில், குஷியின் இளைய சகோதரர்களான சுராஜ் பிந்த் (வயது 18) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய இருவரும் தங்களது அக்காவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

குஷி பிந்த் இளைஞர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இதற்குக் குடும்பத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், குஷி தொடர்ந்து அந்த இளைஞருடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவத்தன்று குஷி தனது காதலருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த அவரது இரண்டு தம்பிகளும் கடும் ஆத்திரமடைந்தனர். ஆத்திரத்தின் உச்சியில், இருவரும் சேர்ந்து குஷியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளனர். கொலையை மறைக்கத் திட்டமிட்ட சகோதரர்கள், குஷியின் சடலத்தைத் தூக்கில் தொங்கவிட்டு அவர் தற்கொலை செய்து கொண்டது போல் நாடகமாடியுள்ளனர்.

வாக்குமூலத்தின் அடிப்படையில், அக்காவைக் கொலை செய்த சுராஜ் பிந்த் (18) மற்றும் 15 வயது சிறுவன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குடும்ப கௌரவம் என்ற பெயரில் உடன்பிறந்த சகோதரியையே தம்பிகள் கொலை செய்த இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.