தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க எதிர்ப்பு... போராட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் கைது!
காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் உத்தரவுப்படி தமிழகத்திற்குக் காவிரி நீரைத் திறந்து விடக் கூடாது என வலியுறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்ட கன்னட சாலுவாலி வாட்டாள் பக்ஷா அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்களைப் பெங்களூரு காவல்துறையினர் கைது செய்தனர்.
டெல்லியில் நடைபெற்ற காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் கூட்டத்தில், ஜூலை 29-ஆம் தேதி முதல் அடுத்த 15 நாட்களுக்கு நாளொன்றுக்கு 3,500 கன அடி வீதம் தமிழகத்திற்குக் காவிரித் தண்ணீரைத் திறந்து விடுமாறு கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இருப்பினும், கர்நாடகாவில் போதிய நீர் இருப்பு இல்லாத காரணத்தால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது என அம்மாநில அரசு தெரிவித்து வருகிறது.
காவிரி நீர் முறைப்படுத்தும் குழுவின் இப் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கன்னட சாலுவாலி வாட்டாள் பக்ஷா அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் பெங்களூரில் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபட்ட வாட்டாள் நாகராஜ் மற்றும் கன்னட அமைப்புகளைச் சேர்ந்த பலரை காவல்துறையினர் கைது செய்து வாகனங்களில் ஏற்றிச் சென்றனர்.
காவிரி நீர் முறைப்படுத்தும் குழு பிறப்பித்த உத்தரவை எதிர்த்துக் காவிரி மேலாண்மை ஆணையத்திடம் மேல்முறையீடு செய்யக் கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. அம்மாநிலத்தில் நிலவும் நீர் தேவையைச் சுட்டிக்காட்டித் தண்ணீரைத் திறக்க முடியாது என மேல்முறையீட்டு மனுவில் தெரிவிக்கத் திட்டமிட்டுள்ளது.