undefined

“ஓபிஎஸ் அரசியலில் அனாதையாக நிற்கிறார்” - செல்லூர் ராஜு விமர்சனம்!

 

அதிமுகவின் வாக்குகள் பிரிய வாய்ப்பில்லை என்று கூறிய செல்லூர் ராஜு, ஓபிஎஸ்-ன் சமீபத்திய கருத்துகளுக்குக் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். மத்திய அமைச்சர் அமித் ஷா தன்னிடம் "திமுகதான் ஜெயிக்கும்" என்று கூறியதாக ஓபிஎஸ் தெரிவித்த கருத்திற்குப் பதிலளித்த செல்லூர் ராஜு, “அரசியல் எதிர்காலம் இல்லாததால் என்ன செய்வது என்று தெரியாமல் ஓபிஎஸ் அனாதையாக நிற்கிறார். அவருடன் இருந்தவர்கள் எல்லாம் இப்போது அதிமுகவிற்கு வந்துவிட்டார்கள். அவர் என்ன செய்வார் பாவம்” என்று எள்ளி நகையாடினார்.

"எடப்பாடியார் 200 தொகுதிகளுக்கு மேலாக மக்களைச் சந்தித்துவிட்டார். மக்கள் அவர் பின்னால் கடல் போல் திரண்டு வருகிறார்கள். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகிவிட்டனர். கூட்டத்தை வைத்து ஒருவரின் வெற்றியைத் தீர்மானிக்க முடியாது எனக் குறிப்பிட்ட அவர், நடிகர் சிவாஜி கணேசன், டி. ராஜேந்தர், பாக்யராஜ் ஆகியோரை உதாரணம் காட்டி, கூட்டம் கூடுவதெல்லாம் வாக்குகளாக மாறாது என்று கூறினார்.

திமுக ஆட்சியில் மின்கட்டண உயர்வு மற்றும் வரிகள் காரணமாக வியாபாரிகள் மற்றும் தொழில் முனைவோர் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிமுக ஆட்சி எப்போது வரும் என்று அவர்கள் ஏங்குவதாகவும் தெரிவித்தார். எதிர்க்கட்சியாக இருந்தபோது 'கோ பேக் மோடி' என்று சொன்ன திமுக, இப்போது பிரதமரை வெள்ளை குடை ஏந்தி வரவேற்பது ஏன் என்று கேள்வி எழுப்பினார். மேலும், பாஜகவுடன் யார் கூட்டணி வைத்தால் அது நல்ல கட்சி என்பதற்கு திமுக-வே ஒரு சாட்சி என்றும் அவர் சாடினார்.

சசிகலா புதிய கட்சி தொடங்கியது குறித்த கேள்விக்கு, தான் இன்னும் செய்திகளைப் பார்க்கவில்லை என்றும், பார்த்திருந்தால் கண்டிப்பாகப் பதில் சொல்லியிருப்பேன் என்றும் கூறி அந்தப் பதிலை நாசூக்காகத் தவிர்த்தார்.