"ஓபிஎஸ் அரசியல் வாழ்வு முடிந்துவிட்டது" - செல்லூர் ராஜூ கலகல
மதுரையில் நடைபெற்ற அரசுத் திட்டப் பணிகளுக்கான பூமி பூஜையில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, செய்தியாளர்களிடம் பேசுகையில் திமுக அரசு மற்றும் ஓ. பன்னீர்செல்வம் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
மதுரை பாப்பாகுடி பகுதியில் ₹16 லட்சம் மதிப்பிலான கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகளைத் தொடங்கி வைத்த செல்லூர் ராஜூ, நடப்பு அரசியல் நிலவரங்கள் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் வாழ்வு அஸ்தமனமாகிவிட்டது என்றும், அவர் தகுதியில்லாமல் பேசி வருகிறார். 2021ம் ஆண்டிலிருந்தே ஓபிஎஸ் திமுகவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வருவதாகவும், அதிமுகவைக் காட்டிக் கொடுத்தவர் அவர்தான் என்றும் குற்றம் சாட்டினார். இது தொடர்பாகத் தனக்கும் ஓபிஎஸ்-க்கும் இடையே வாக்குவாதம் நடந்ததாகவும் கூறினார்.
முதல்வர் ஸ்டாலினுக்குத் தோல்வி பயம் வந்துவிட்டதால், தேர்தலை முன்னிட்டு முதியோர் உதவித்தொகை மற்றும் மகளிர் உரிமைத் தொகையை வழங்கி வருவதாகக் கூறினார். திமுக எப்போதும் தேர்தல் நேரத்தில் மட்டுமே பளபளக்கும் சாலைகளை அமைக்கும் 'தில்லுமுல்லு' வேலைகளைச் செய்யும் என்றார். தங்களுக்குச் சாதகமாக வராத கட்சிகளை உடைப்பதுதான் திமுகவின் வழக்கம் என்றும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்குத் திமுகவில் பதவி வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தனித்து ஆட்சி அமைக்கும் என்றார்.