டெல்லி உட்பட பல வடமாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்!
வடமாநிலங்களில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்குக் கனமழை தொடர்ந்து பெய்யக்கூடும் என்பதால் டெல்லிக்கு இந்திய வானிலை மையம் ‘ஆரஞ்ச் அலர்ட்’ விடுத்துள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்கள் மற்றும் நிர்வாகத்தினர் அனைவரும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அடுத்த 24 மணி நேரத்திற்குள் கிழக்கு ராஜஸ்தான் மற்றும் மேற்கு மத்திய பிரதேச மாநிலங்களில் மிகக் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் தேங்கக்கூடிய நீரை அகற்றும் பணிகளுக்கான முன்னெச்சரிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இன்றும் நாளையும் கனமழையும், பீகார் மாநிலத்தில் வரும் நாட்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.