ஆஸ்கர் விருது விதிகளில் அதிரடி மாற்றம்: ஏஐ தொழில்நுட்பத்திற்கு கிடுக்கிப்பிடி!
திரைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் 99-வது ஆஸ்கர் விருதுகளுக்கான புதிய விதிகளை அகாடமி விருதுகள் குழு தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி, திரைப்படங்களின் திரைக்கதை மற்றும் நடிப்பில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடாது எனத் அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மனித உழைப்பையும் படைப்பாற்றலையும் ஊக்குவிக்கும் வகையில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடிகர்களுக்கான பரிந்துரைப் பட்டியலிலும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இனி ஒரே நடிகர் வெவ்வேறு படங்களில் நடித்ததற்காகப் பல பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், சர்வதேச திரைப்படப் பிரிவில் ஒரு நாட்டிலிருந்து ஒன்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் போட்டியிடவும் புதிய விதிகளில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மாற்றம் உலக நாடுகளின் தரமான படைப்புகள் ஆஸ்கர் மேடைக்கு வரப் பெரும் உதவியாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
திரைப்பட விழாக்களில் முதற்பரிசு வெல்லும் படங்களுக்குக் கூடுதல் அங்கீகாரம் அளிக்கும் வகையில், அவை இனி நேரடியாக ஆஸ்கர் பரிந்துரைப் பட்டியலுக்குச் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றங்கள் அனைத்தும் திரைத்துறையினரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. 99-வது ஆஸ்கர் மேடை புதிய விதிகளுடன் கலைநயம் மிக்கப் படைப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தயாராகி வருகிறது.