20 மொழிகளில் 12,000 பாடல்கள்... பத்ம விபூஷண் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்... விருதுகளும், சாதனைகளும்!

 

இந்தியத் திரையுலகின் ஈடு இணையற்ற குரலுக்குச் சொந்தக்காரரும், காலத்தால் அழியாத ஆயிரக்கணக்கான பாடல்களை வழங்கியவருமான ஆஷா போஸ்லே இன்று மும்பையில் காலமானார். அவருக்கு வயது 92. இவரது மறைவு இந்திய இசைத் துறைக்கு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.

மும்பையில் வசித்து வந்த ஆஷா போஸ்லே அவர்களுக்கு நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர் தென்மும்பையில் உள்ள 'பிரீச் கேண்டி' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சுவாசப் பிரச்சினை: அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சுவாசக் கோளாறு ஏற்பட்டதால் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டது. மருத்துவர்களின் தீவிர முயற்சி பலனின்றி இன்று மதியம் 1:04 மணி அளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்ததாக அவரது மகன் ஆனந்த் போஸ்லே கண்ணீர் மல்க உறுதிப்படுத்தியுள்ளார்.

மறைந்த பாடகி ஆஷா போஸ்லேயின் உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அவரது இறுதிச் சடங்குகள் நாளை (ஏப்ரல் 13, திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு மும்பையில் உள்ள புகழ்பெற்ற சிவாஜி பூங்காவில் முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1933-ல் பிறந்த ஆஷா போஸ்லே, தனது 10-வது வயதிலேயே பாடத் தொடங்கினார். இசை மேதை லதா மங்கேஷ்கரின் தங்கை என்ற அடையாளத்துடன் நுழைந்தாலும், தனது தனித்துவமான மற்றும் கவர்ச்சிகரமான குரலால் உலகப் புகழ்பெற்றார். 20-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் சுமார் 12,000-க்கும் அதிகமான பாடல்களைப் பாடி கின்னஸ் உலக சாதனையில் இடம் பிடித்தவர்.

மெல்லிசை, கர்நாடக இசை, கஜல், பாப் மற்றும் குத்துப்பாடல்கள் என அனைத்துப் பாணிகளிலும் முத்திரை பதித்தவர்.

தமிழ் ரசிகர்கள் கொண்டாடும் பாடல்களாக 'எங்க ஊரு பாட்டுக்காரன்' - செண்பகமே செண்பகமே (இளையராஜா இசை) 'ஹே ராம்' - நீ பார்த்த பார்வை (கமல்ஹாசனுடன் இணைந்து),  'அலைபாயுதே' - செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்.. (ஏ.ஆர். ரஹ்மான் இசை), 'சந்திரமுகி' - கொஞ்ச நேரம்.. கொஞ்ச நேரம்.. (வித்யாசாகர் இசை) ஆகிய பாடல்கள் இன்றளவிலும் உள்ளது.

இந்திய அரசு இவருக்கு உயரிய விருதான பத்ம விபூஷண் (2008) மற்றும் தாதா சாகேப் பால்கே (2000) விருதுகளை வழங்கி கௌரவித்தது. மேலும் பல முறை தேசிய விருதுகளையும், பிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார்.

லதா மங்கேஷ்கர் மறைந்து சில ஆண்டுகளிலேயே ஆஷா போஸ்லேவும் மறைந்திருப்பது இசை ரசிகர்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் ரஜினிகாந்த், ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட பல திரையுலகப் பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.