தென்காசியில் ஆற்றுக்குள் கவிழ்ந்த அரசு பேருந்து - 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயம்!
தென்காசியில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்து ஒன்று எதிர்பாராதவிதமாக ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பயணிகள் பலத்த காயமடைந்தனர்.
தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து 32 பயணிகளுடன் திருநெல்வேலி நோக்கிச் சென்ற 'ஒன் டூ ஒன்' அரசு விரைவுப் பேருந்து, வேட்டைக்காரன் குளம் / அமுதகன்னி ஆற்றுப் பகுதி வழியாகச் சென்று கொண்டிருந்தது. அப்பகுதியைக் கடந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, ஆற்றுப் பாலத்தின் அருகில் இருந்த தடுப்புச் சுவரை இடித்துக்கொண்டு சுமார் 10 அடி ஆழமுள்ள ஆற்றுப் பகுதிக்குள் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக அமுதகன்னி ஆற்றில் தற்போது நீர்வரத்து இல்லாததால், பெரும் அசம்பாவிதம் மற்றும் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.
இவிபத்தில் பேருந்தில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த குற்றாலம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், பொதுமக்களின் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து காரணமாக நெல்லை - தென்காசி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், காவல்துறையினர் விரைந்து செயல்பட்டுப் போக்குவரத்தைச் சீர்செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.