நாடு முழுவதும் 8.5 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - வங்கி சேவை பாதிப்பு!

 

இன்று ஒரு நாள் நாடு, மாதத்தின் அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை அளிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமார் 8.5 லட்சம் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

வங்கி ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான அனைத்து சனிக்கிழமைகளிலும் விடுமுறை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து காலதாமதப்படுத்தி வருவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் குற்றம்சாட்டியுள்ளன. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறை அளித்தால், அதற்குப் பதிலாக வாடிக்கையாளர் சேவை நேரத்தை தினமும் கூடுதலாக 40 நிமிடங்கள் நீட்டிக்கத் தயாராக இருப்பதாக ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் கோரிக்கை தொடர்பான விவகாரம் இரண்டரை ஆண்டுகளுக்கு மேலாக மத்திய நிதி அமைச்சகத்திடம் நிலுவையில் உள்ளதாகவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண அரசுக்கு நோட்டீஸ் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் எச்.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

சனிக்கிழமை விடுமுறை தவிர, வங்கிகளில் எழுத்தர் மற்றும் துணை ஊழியர்களைப் போதுமான அளவில் பணியமர்த்துதல், தேசிய ஓய்வூதியத் திட்டத்தை பழைய ஓய்வூதியத் திட்டமாக மாற்றுதல், பணிக்கொடை  உச்சவரம்பை அதிகரித்தல் மற்றும் காலியாக உள்ள இயக்குனர் பதவிகளை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் போராட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய முன்னணி விடுத்த அழைப்பின்பேரில், நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை மற்றும் சில தனியார் வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால் வங்கிச் சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.