தவெக வேட்பாளரை ஊருக்குள் நுழையவிடாமல் தடுத்து நிறுத்திய சொந்த கட்சி தொண்டர்கள் - சேலத்தில் பரபரப்பு!

 

சேலம் மாவட்டம் மேட்டூர் சட்டமன்றத் தொகுதி தவெக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செல்வம், தேர்தல் பணிகளுக்காக நேற்று மேட்டூரில் உள்ள கொளத்தூர் பகுதிக்கு வாக்கு சேகரிக்கச் சென்றபோது, அவரது கட்சியினரே அவருக்கு எதிராகக் கொந்தளித்து, ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

மேட்டூர் தொகுதிக்கு உட்பட்ட கொளத்தூர் பகுதி நிர்வாகிகளைச் சந்தித்து, தேர்தல் பிரசார வியூகங்கள் குறித்து ஆலோசிக்க வேட்பாளர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்றார். அப்போது, அங்கு திரண்டிருந்த தவெக தொண்டர்கள் அவரது காரை மறித்து, ஊருக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தினர். தொண்டர்கள் வேட்பாளர் செல்வம் மீது முன்வைக்கும் புகார்கள் மிகவும் வினோதமானவை மற்றும் அதிர்ச்சியளிக்கக் கூடியவை.

கட்சியின் தலைவர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் சமீபத்தில் வெளியாக இருந்த நிலையில், அந்தப் படத்திற்காகத் தொண்டர்கள் முன்பதிவு செய்திருந்த டிக்கெட்டுகளை வேட்பாளர் செல்வம் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மொத்தமாகத் திரையரங்குகளில் இருந்து ப்ளாக் செய்ததாக கூறப்படுகிறது. அவ்வாறு ப்ளாக் செய்த டிக்கெட்டுகளை, மீண்டும் அதே கட்சித் தொண்டர்களிடமே அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்ததாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கட்சிப் பணிகளில் பழைய தொண்டர்களைப் புறக்கணித்து விட்டு, தனக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதாகவும், ஒருதலைப்பட்சமாகச் செயல்படுவதாகவும் அவர்கள் ஆதங்கத்துடன் புகார் தெரிவித்துள்ளனர்.

 வேட்பாளரின் காரை முற்றுகையிட்டுத் தொண்டர்கள் முழக்கமிட்டதால் அந்தப் பகுதியில் நீண்ட நேரம் பதற்றம் நிலவியது. பின்னர் காவல்துறையினர் தலையிட்டுத் தொண்டர்களைச் சமாதானப்படுத்தினர். "டிக்கெட் விவகாரத்தில் முறைகேடு செய்த வேட்பாளரை மாற்ற வேண்டும். இல்லையென்றால் தேர்தல் பணிகளில் ஒத்துழைக்க மாட்டோம்" எனத் தொண்டர்கள் கறாராகத் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த நிலையில், ஒத்துழைப்பு இல்லாமல் அங்கிருந்து வாக்கு சேகரிக்காமலேயே வேட்பாளர் கிளம்பிச் சென்றார்.