பயங்கரம்... ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்துத் தொழிலாளி பலி, 4 பேர் படுகாயம்!
தலைநகர் டெல்லி ஓக்லா தொழிலகப் பகுதியில் உள்ள குடோனில், லாரியிலிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை இறக்கும்போது ஏற்பட்ட கோர விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்; மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
-
டெல்லி ஓக்லா Phase-1 பகுதியில் உள்ள 'எஸ்.எம். டிரேடர்ஸ்' (SM Traders) என்ற நிறுவனத்தின் குடோனில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. காஜியாபாத்தில் இருந்து லாரியில் கொண்டுவரப்பட்ட வணிக ரீதியான ஆக்ஸிஜன் சிலிண்டர்களைத் தொழிலாளர்கள் இறக்கி குடோனுக்குள் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
-
சிலிண்டர்களை இறக்கும்போது எதிர்பாராதவிதமாக ஒரு சிலிண்டர் நழுவி சாலையில் விழுந்துள்ளது. விழுந்த வேகத்தில் திடீரென அந்த ஆக்ஸிஜன் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தின் வீரியம் அதிகமாக இருந்ததால் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
-
இச்சம்பவத்தில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த மோகித் சிங் (வயது 35) என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் கடந்த மூன்று ஆண்டுகளாக அங்கு உதவியாளராகப் பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
-
உமேஷ், அரவிந்த், மனோஜ் மற்றும் பங்கஜ் ஆகிய நான்கு தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக் காக எய்ம்ஸ் மருத்துவமனை டிரமா சென்டரில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினரும், தடயவியல் நிபுணர்களும் மற்றும் தீயணைப்புப் படையினரும் இணைந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர். இந்த விபத்து தொடர்பாகக் குடோனின் உரிமையாளர் பிடிபட்டுள்ள நிலையில், சிலிண்டர்களின் பாதுகாப்பு உரிமங்கள் மற்றும் விபத்துக்கான காரணங்கள் குறித்துக் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.