கொஞ்சம் கவனிங்க முதல்வரே... நெல் கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் குறையல... விவசாயிகள் வேதனை!
கடலூர் மாவட்டம் பி.என்.பாளையம் பகுதியில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. தமிழக அரசின் எச்சரிக்கையை மீறி அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கொள்முதல் நிலையத்தில் விவசாயிகளிடம் இருந்து லஞ்சம் பெறுவது அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஒரு மூட்டைக்கு ரூ.50 லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட அந்தப் பணத்தைக் கொடுக்காவிட்டால் நெல்லை எடைபோட அதிகாரிகள் மறுப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் தங்களது நெல்லை விற்பனை செய்ய முடியாமல் கடுமையான அவதிக்குள்ளாகி வருவதாகக் கூறியுள்ளனர்.
இதுமட்டுமின்றி வாட்ச்மேனுக்கு ரூ.500 வரை லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் இந்தச் செயலால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பைச் சந்தித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக இதில் தலையிட்டுத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.